Ayalaan Box Office: கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுத்ததா அயலான்… பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு இதுதான்..?
சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. சிவாவின் முதல் சயின்ஸ் பிக்ஷன் படமான அயலான், தனுஷின் கேப்டன் மில்லருக்குப் போட்டியாக வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனையடுத்து அயலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயலான் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு
கோலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அயலான் திரைப்படம் சொன்னபடி இன்று ரிலீஸானது. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஏலியன்ஸை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள அயலான், சிவகார்த்திகேயன் கேரியரில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், பின்னர் படிப்படியாக பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் முன்னணி ஹீரோக்களுடன் போட்டிப் போட ஆரம்பித்தார். இதனால் சில படங்கள் தோல்வியடைந்தது, ஆனாலும் டாக்டர், டான் படங்கள் மூலம் கம்பேக் கொடுத்தார். பின்னர் பிரின்ஸ் படத்தின் தோல்வியால் துவண்டு போன சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக வெளியான மாவீரன் ஓரளவு கை கொடுத்தது.
இந்நிலையில், இந்தாண்டு அயலான் திரைப்படம் மூலம் பொங்கல் ரேஸில் களமிறங்குகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்துக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் படம் பொங்கலுக்கு வெளியாவது இதுதான் இரண்டாவது முறை. 2018ல் தொடங்கப்பட்ட அயலான் திரைப்படம் பல தடைகளையும் பைனான்ஸ் பிரச்சினைகளையும் கடந்து தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகியுள்ள அயலான், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியான அயலானுக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. முக்கியமாக படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இதனால் அயலான் பாக்ஸ் ஆபிஸிலும் சக்சஸ் ஆகும் என கோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
அதன்படி, அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. பொங்கல் விடுமுறை முடியும் முன் 100 கோடி வரை வசூலித்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக இந்தப் படம் 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணையலாம் எனவும், இதுவே சிவகார்த்திகேயனின் பெஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் மூவியாக இருக்கும் என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் அயலானுக்கு போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 200 முதல் 300 கோடி ரூபாய் வரை வசூலிக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.