நெட்பிளிக்சிலிருந்து நயன்தாரா படம் நீக்கம்
சென்னை: இந்து அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக, நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ படம் நெட்பிளிக்சிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, ஜெய், சத்யராஜ் நடித்த படம் ‘அன்னபூரணி’. இந்த படம் தியேட்டர்களில் வெளியான நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
புதியவர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படத்தின் பிராமண பெண்ணான நயன்தாரா, அசைவ உணவுகள் மீது சிறு வயது முதல் பிரியம் கொண்டவராக நடித்திருந்தார். மேலும் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் அவர், அசைவ உணவு சமைப்பதற்கு முன், இஸ்லாமிய முறைப்படி தொழுகை செய்வதாகவும் காட்டப்பட்டது.
சில சர்ச்சைக்குரிய வசனங்களும் இடம்பெற்றதால், இந்த படத்துக்கு தடை விதிக்க இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கினர். மேலும் மும்பை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நயன்தாரா, ஜெய் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், தொடர் எதிர்ப்புகள் காரணமாக, நெட்பிளிக்சிலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, படம் மீண்டும் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.