சோனி-ஜீ என்டர்டெயின்மென்ட் மெகா கூட்டணி முறிந்ததா..?
இந்திய மீடியா துறையில் தற்போது பெரும் போட்டி நடைபெற்று வருகிறது, முகேஷ் அம்பானி தனது வயாகாம்18 உடன் டிஸ்னி-ஐ இணைக்கும் பணியில் தீவிரமாக உள்ளார், கௌதம் அதானி மீடியா துறையில் தொடர்ந்து முதலீடு செய்ய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி இந்தியா பிரிவு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைப்புத் தோல்வியில் முடியலாம் என்றும், சோனி இந்தியா ஜனவரி 20 க்கு முன் இணைப்பு ஒப்பந்தத்தை நிராகரிக்கும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு வருடமாக இரு மீடியா நிறுவனங்கள் 10 பில்லியன் டாலர் மதிப்பில் இணைந்து மெகா கூட்டணியை அமைப்பதாக அறிவித்ததிலிருந்தே தடை, தாமதங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் சில நிபந்தனைகளுக்கு ஜீ கட்டுப்படவில்லை என்பது சோனியின் ஆட்சேபனை. எனவே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.Zee மற்றும் Sony இடையேயான $10 பில்லியன் இணைப்பு ரத்து செய்யப்படலாம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.
மேலும் Zee நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி புனித் கோயங்கா , அதன் நிறுவனரின் மகனும் இணைக்கப்பட்ட நிறுவனத்திற்கு தலைமை தாங்குவதற்கு ஜப்பானிய கூட்டு நிறுவனம் முட்டுக்கட்டை போட்டதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, சோனி நிறுவனம் இப்போது இந்த முன்மொழியப்பட்ட இணைப்பிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளது. முதலில் சோனி நிறுவனம் Zee என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு பணிநீக்கம் அறிவிப்பை அனுப்பலாம் என்று கூறப்படுகிறது. சிஇஓ பதவி தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்த முடிவுக்கு காரணம். 2021-ம் ஆண்டு இரு நிறுவனங்களை இணைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில், புனித் கோயங்கா புதிய நிறுவனத்தை வழிநடத்துவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சந்தை கட்டுப்பாட்டாளர் செபியின் உத்தரவு காரணமாக புனித் கோயங்கா சட்டப் போராட்டத்தில் மாட்டிக் கொண்டார். எனவே, SEBI விசாரணைக்கு மத்தியில் அவரை CEO ஆக சோனி என்டர்டெயின்மென்ட் பார்க்க விரும்பவில்லை.
ஒரு மாத கால அவகாசம் முடிவடையும் நிலையில் இரு தரப்பும் எந்த உடன்பாட்டையும் இறுதி செய்யவில்லை. Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) MD மற்றும் CEO புனித் கோயங்கா இணைந்த பிறகு உருவான புதிய நிறுவனத்திற்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இன்னும் ஒருமித்த கருத்து இல்லை.
இந்நிலையில், சோனி-ஜீ மெகா இணைப்பு கூட்டணி ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் இணைப்பு நிறுத்தப்படும் என்ற வெளியான செய்தி அடிப்படையற்றது மற்றும் உண்மையில் தவறானது என்று Zee என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சற்றுமுன் தெளிவுபடுத்தியது. Zee என்டர்டெயின்மென்ட், சோனி இணைப்பதைத் திரும்பப் பெறத் திட்டமிட்டுள்ளது என்பது ஆதாரமற்றது மற்றும் உண்மையில் தவறானது என்று கூறியது. முன்மொழியப்பட்ட இணைப்பை வெற்றிகரமாக மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.