பொங்கல் ரேசிலிருந்து லால் சலாம் விலகல்

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.
இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
சமீபத்தில் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியது.
இந்த நிலையில் இப்படம் பொங்கல் ரேசிலிருந்து விலகியுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது புது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கல் ரேசில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.