இது தெரியுமா ? உலகிலேயே மிகப்பழமையான மலை திருவண்ணாமலை
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.
தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.