தேர்தல் ஆணையர்கள் நியமனம்- மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு தடை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மத்திய பாஜக அரசின் புதிய சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் இந்த புதிய சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஆனால் மத்திய பாஜக அரசு இந்த உத்தரவை நிராகரிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறுவார் என அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே டெல்லி அதிகாரிகள் நியமன விவகாரத்திலும் இதேபோல உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செல்லாததாக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தேர்தல் ஆணையர்கள் விவகாரத்திலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய பாஜக அரசு நிராகரித்து புதிய சட்டம் கொண்டு வந்ததால் நாடாளுமன்றத்திலும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் மத்திய அரசின் இப்புதிய சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த் மனுவில் மத்திய அரசின் இப்புதிய சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கவும் வலியுறுத்தி இருந்தனர்.
உச்சநீதிமன்றம் இன்று இந்த மனுவை விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் இந்த புதிய சட்டம் தொடர்பாக மத்திய அரசு பதில் தர நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.