அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு பெயர் இதுதான்.. “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்”
மதுரை: அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ் பெற்றது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இந்த ஜல்லிக்கட்டை காண வருவார்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் பிரமாண்டமான முறையில், கண்கவர் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அரங்கம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இநிந்லையில், அரங்கத்தில், பெயர் பொருத்தும் பணியும் நடைபெற்று முடிந்துள்ளது.
அதன்படி, பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து இந்த மைதானத்தை திறந்து வைக்க உள்ளார் என்பதால் இறுதி கட்ட வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் மூர்த்தி இன்று பார்வையிட்டார்.
ஜல்லிக்கட்டு அரங்கத்தின் முகப்பின் உச்சியில் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.