3 ஆண்டுகளில் 160% மேல் லாபம் கொடுத்த பங்கு.. எல்ஐசி-யிடம் இருக்கு உங்களிடம் இருக்கா?
டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்தால்தான் நல்ல லாபம் பார்க்க முடியும் என்று சில முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் சில பென்னி ஸ்டாக் பங்குகளில் முதலீடு செய்தாலும் நல்ல ஆதாயம் ஈட்ட முடியும்.மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு பென்னி ஸ்டாக் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயம் அளித்துள்ளது. அந்த மல்டிபேக்கர் ஆதாயம் கொடுத்த நிறுவன பங்கு என்பிசிசி (இந்தியா). இந்த நிறுவன பங்குகள் உங்கள் வசம் இருக்கிறதா?. என்பிசிசி (இந்தியா) நிறுவனம் குறித்து சிறு தகவல் இதோ: மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா நிறுவனம் என்பிசிசி (இந்தியா) லிமிடெட். இந்நிறுவனம் சிவில் கட்டுமான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 6.55 சதவீத பங்கு மூலதனத்தை எல்ஐசி கொண்டுள்ளது.இந்நிறுவனம் ரூ.55,000 கோடி மதிப்பிலான ஆர்டர்களை கொண்டுள்ளது. தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தேசிய பேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி) வளாகத்தை நிர்மாணிப்பதற்கான ஒரு புதிய ஆர்டரை பெற்றுள்ளது. ரூ.218 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் தற்போதுள்ள வர்த்தக வசதி மையத்தை மாற்றியமைக்கும் பணிகளும் அடங்கும்.மேலும், என்பிசிசி (இந்தியா) நிறுவனம் கான்பூரில் பிபிஎஸ் அரசு மருத்துவ கல்லூரியில் சோனேபட் திட்டத்தில் ரூ.134.13 கோடி செலவை அதிகரிப்பதற்கான நிர்வாக அனுமதியையும் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து வர்த்தக ஆர்டர்களை பெற்று வருகிறது, அதேசமயம், இந்நிறுவனத்தின் நிதி நிலவரமும் மிக சிறப்பாக உள்ளது.என்பிசிசி (இந்தியா) நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.6,736 கோடியும், நிகர லாபமாக ரூ.231.14 கோடியும் ஈட்டியுள்ளது. மேலும்,இந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.63.13 கோடியும், செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.85.27 கோடியும் ஈட்டியுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் என்பிசிசி (இந்தியா) நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயம் அளித்துள்ளது. கணக்கீடு காலத்தில் இப்பங்கின் விலை 160 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே என்பிசிசி (இந்தியா) பங்கின் விலை ரூ.94.37ஐ தொட்டது.இது இப்பங்கின் 52 வார புதிய உச்ச விலையாகும். கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2023 மார்ச் 28ம் தேதியன்று இப்பங்கின் விலை ரூ.30.96ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை ரூ.91.77ஆக உள்ளது.