கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூரில் அமையும் கடற்பாசி பூங்காவால் 10,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூரில் அமையும் கடற்பாசி பூங்காவால் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூரில் 78 ஏக்கரில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைய உள்ளஇடத்தை மாநில மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியது: கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மங்கனூரில் 78 ஏக்கரில் அமைய உள்ளபல்நோக்கு கடற்பாசி பூங்கா மூலம் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு, கடற்பாசிகளில் இருந்து மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படும். இங்கு அமைய உள்ள கடற்பாசி பூங்காவால் விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டம் ஏற்கெனவேதொடங்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு ஏற்கெனவே வாக்கி -டாக்கி, சாட்டிலைட் போன்டிரான்ஸ்பார்ம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படுவோருக்கு வழங்கவும் அரசுதயாராக உள்ளது. மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மானியவிலையில் டீசல், மண்ணெண்ணெயும் கூடுதலாக வழங்கப்படும்.
இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கதமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், மத்திய அரசுதான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்க ஏற்கெனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்து. அந்த வகையில் மீட்டுத் தர வேண்டியது மத்திய அரசுதான்.
பால் உற்பத்தியாளர்களின் தேவைக்கு ஏற்ப கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு ஆன்லைன் முன்பதிவால் எந்தப் பாதிப்பும் வராது. ஒருவேளை பாதிப்பு இருந்தால் அது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.