சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.2,280-க்கு விற்பனை
சத்தியமங்கலம் மலர் சந்தையில் நேற்று மல்லிகை விலை கிலோ ரூ.2,280-க்கு விற்பனயானதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங் கலத்தை அடுத்துள்ள தாண்டம் பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, காக்கட்டான், சாதிமல்லி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு பறிக்கப்படும் பூக்கள், சத்தியமங்கலத்தில் செயல்படும் தமிழ்நாடு மலர்கள் உற்பத்தி யாளர்கள் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மலர் சந்தையில் விற்பனை செய்யப் படுகின்றன. இந்த சந்தையில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு, தும்கூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் அதிகரிக்கும் பனிப்பொழிவால் பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் மலர் சந்தையில், மல்லிகை விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.
நேற்று முன் தினம் மல்லிகை கிலோ ரூ.1,600-க்கு விற்பனையான நிலையில், நேற்று கிலோ ரூ.2,280-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் மலர் சந்தையில் நேற்று பூக்களின் விலை விவரம் (கிலோவுக்கு):
மல்லிகை ரூ.2,280, காக்கட்டான் ரூ.1,350, முல்லை ரூ.1,190, கனகாம்பரம் ரூ.620, ஜாதிமுல்லை ரூ.200, அரளி ரூ.200, செவ்வந்தி ரூ.150.
சேலத்தில் ரூ.1,400-க்கு விற்பனை: சேலம் வஉசி பூ மார்க்கெட், சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் மிகப்பெரியது. இங்கு சேலம் மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஏராளமானோர் தினமும் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பண்டிகை, திருவிழா, விரத நாட்கள் போன்றவற்றின்போது, பூக்களின் தேவை அதிகரித்து, அவற்றின் விலையும் அதிகரிப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று அமாவாசை தினம் என்பதால், வழி பாட்டுக்கான பூக்களின் தேவை அதிகரித்திருந்தது. இதனால், வஉசி மார்க்கெட்டில் நேற்று விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. மக்களால் அதிகம் விரும்பி வாங்கிச் செல்லப்படும் குண்டு மல்லி நேற்று கிலோ ரூ.1,400-க்கு விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் அதிகரித்திருந்தது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியது: அமாவாசை என்பதால், பூக்கள் அதிகமாக விற்பனையானது. இந்நிலையில் பூக்கள் வரத்து சற்று குறைவாக இருந்தது. எனவே, அவற்றின் விலையும் உயர்ந்தது. குண்டு மல்லி கிலோ ரூ.1,400-க்கும், சன்னமல்லி கிலோ ரூ.1,200-க்கும் விற்பனையானது. காக்கட்டான் ரூ.500, ஜாதிமல்லி ரூ.480, செவ்வரளி ரூ.300, மஞ்சள் அரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.100 என அனைத்து வகை பூக்களுமே விலை அதிகரித்திருந்தன, என்றார்.