ஒரே செய்தி.. தாறுமாறாக உயர்ந்த ஐடி நிறுவன பங்கு விலை.. அயோத்தி ராமருக்கு நன்றி..!!
பங்குச் சந்தையில் ஒரு நிறுவன பங்கின் விலை எப்போது உயரும், எப்போது இறங்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
நிறுவனம் தொடர்பான ஒரு செய்தி அந்நிறுவன பங்கின் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.அந்த வகையில், மைக்ரோ கேப் நிறுவனமான அல்லைட் டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் (Allied Digital Services Limited) தொடர்பான ஒரு செய்தி அந்நிறுவன பங்கின் விலையை புதிய உச்சத்தை தொட வைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு, திறப்பதற்கு தாயாராகி வரும் ராமர் கோயிலில் வரும் 22ம் தேதியன்று சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. தற்போது அயோத்தி ஸ்மார்ட் சிட்டியில் கண்காணிப்புக்கான மாஸ்டர் சிஸ்டம் ஒருங்கிணைப்பாளராக ஐ.டி. சேவைகளை வழங்கும் மைக்ரோ கேப் நிறுவனமான அல்லைட் டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனமே தெரிவித்துள்ளது.அயோத்தி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தற்போதுள்ள ஐடிஎம்எஸ் கட்டுப்பாட்டு அறையுடன் சிசிடிவி கண்காணிப்பை ஒருங்கிணைப்பதற்கான மாஸ்டர் சிஸ்டம் இன்டிகிரேட்டராக (எம்எஸ்ஐ) அல்லைட் டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் பல இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பை இந்நிறுவனம் நிறுவ உள்ளது. இது அந்நிறுவனத்துக்கு பெரிய வர்த்தக வாய்ப்பாக கருதப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக அந்நிறுவன பங்கின் விலை உயர்ந்து வருகிறது.குறிப்பாக, நேற்று (வியாழக்கிழமை) மும்பை பங்குச் சந்தையில் அல்லைட் டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை அப்பர்சர்க்கியூட்டை எட்டியது. நேற்று அப்பங்கின விலை 20 சதவீதம் உயர்ந்து ரூ.170.90ஆக அதிகரித்தது.இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார கால புதிய உச்சமாக ரூ.196.05ஐ எட்டியது. அல்லைட் டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் ரூ.37 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த 2 காலாண்டுகளாக லாபத்தை சம்பாதித்துள்ளது.அல்லைட் டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டில் முறையே ரூ.3.62 கோடி மற்றும் ரூ.5.60 கோடி லாபம் ஈட்டியுள்ளது.அல்லைட் டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த சில காலண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அயோத்தி ஸ்மார்ட் சிட்டியில் கண்காணிப்புக்கான மாஸ்டர் சிஸ்டம் ஒருங்கிணைப்பாளராக அந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது அந்நிறுவனத்துக்கு பெரிய பாசிட்டிவ்வான விஷயமாகும். அல்லைட் டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,043 கோடியாக உள்ளது.