Ambati Rayudu: `பவன் கல்யாண் கட்சியில் இணைகிறாரா அம்பத்தி ராயுடு? – வைரலாகும் பதிவு
இந்திய அணி மற்றும் ஐ.பி. எல் தொடரில் மும்பை, சென்னை போன்ற அணிகளுக்காக விளையாடி ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு அரசியலுக்கு என்ட்ரி கொடுத்து ஆந்திராவின் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இணைந்தார்.
இணைந்த அதே வேகத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. அதன் பிறகு அவர் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவின.
இந்நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணை நேரில் சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்தப் பதிவில், “ ஆந்திர மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க என்னால் இயன்ற சமூகப் பணிகளைச் செய்திருக்கிறேன்.
நான் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது என்னுடைய இலக்குகளை நிறைவேற்ற முடியும் என்று நம்பினேன். ஆனால் சில காரணங்களால் இலக்குகளை எட்ட முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடய சித்தாந்தங்களும், ஒய்.எஸ்.ஆர் கட்சியின் சித்தாந்தங்களும் ஒத்துப்போகவில்லை. அதனால் அந்த கட்சியில் இருந்து விலகி இருக்கிறேன். பிறகு எனது நெருங்கிய நண்பர்களும், நலம் விரும்பிகள், குடும்பத்தினர் அனைவரும் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணை ஒருமுறை சந்திக்கும் படி ஆலோசனை வழங்கினர்.
View this post on Instagram
இதனைத்தொடர்ந்து பவன் கல்யாணை நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையிலும், அரசியல் குறித்தும் நீண்ட நேரம் ஆலோசித்தேன். அவருடைய கொள்கைகளும், கருத்துகளும் என்னுடைய கருத்துகளோடு ஒத்துப் போவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் பணிகளுக்காக துபாய் செல்கிறேன். எப்போதும் ஆந்திர மக்களுடன் உடன் நிற்பேன். ” என்று தெரிவித்திருக்கிறார்.