ஒரே ஓவரில் 6, 4, 4, 4, 6.. அப்ரிடியை பொளந்த ஃபின்.. மிரட்டிய சிஎஸ்கே வீரர்.. பாகிஸ்தானை அடக்கிய நியூசிலாந்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 12ஆம் தேதி ஆக்லாந்து அந்த நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தானின் புதிய டி20 கேப்டன் சாகின் அப்ரிடி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு முதல் ஓவரிலேயே டேவோன் கான்வேயை டக் அவுட்டாக்கி ஷாஹீன் அப்ரிடி மிரட்டலை கொடுத்தார். ஆனால் அதற்கு மற்றொரு துவக்க வீரர் ஆலன் ஃபின் 3வது ஓவரில் 6, 4, 4, 4, 6, 0 என 24 ரன்களை விளாசி ஷாஹின் அப்ரிடிக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
அசத்திய நியூசிலாந்து:
அந்த வகையில் அடுத்ததாக வந்த கேப்டன் வில்லியம்ஸனுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஃபின் தலா 3 பவுண்டரி சிக்சருடன் 34 (15) ரன்கள் விளாசி அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த டார்ல் மிட்சேல் தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் அசத்திய கேப்டன் வில்லியம்சன் 3வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 57 (42) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அடுத்ததாக வந்த கிளன் பிலிப்ஸ் தனது பங்கிற்கு அதிரடியாக 19 (11) ரன்கள் அவுட்டாக மறுபுறம் பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கிய டார்ல் மிட்சேல் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 61 (27) ரன்களை 225.93 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி நியூசிலாந்தை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். 2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டுள்ள இவர் இப்போட்டியில் அதிரடியாக விளையாடியது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
இறுதியில் மார்க் சேப்மேன் 26, சௌதீ 6* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் நியூசிலாந்து 226/8 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாஹீன் அப்ரிடி, அப்பாஸ் அப்ரிடி தலா 3 விக்கெட்களை சாய்த்தார்கள். அதைத் தொடர்ந்து 227 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் சரவெடியாக 8 பந்துகளில் 27 ரன்களை தெறிக்க விட்ட போதிலும் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அதே போல மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த முகமது ரிஸ்வானும் 25 (14) ரன்களில் ஆட்டமிழந்தார்.
2 மாசம் அசத்துனா போதும்.. அவர் டி20 உ.கோ தொடர்நாயகனாக வந்துருவாரு.. சுரேஷ் ரெய்னா கணிப்பு
அப்போது நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ஃபக்கார் ஜமான் 15, இப்திகார் அகமது 24, அசாம் கான் 10 ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாபர் அசாமும் போராடி 57 (14) ரன்களில் ஆட்டமிழந்ததால் 18 ஓவரில் பாகிஸ்தான் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0* (5) கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 4, பென் சீர்ஸ் 2, ஆடம் மில்னே 2 விக்கெட்களை எடுத்தார்கள்.