மும்பை அணியுடன் இணைந்த முன்னாள் வீரர்.. உற்சாகத்தில் பல்தான்ஸ்.. ஒரே குடும்பம்னு சும்மா சொல்லலை பாஸ்
மும்பை எமிரேட்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் மிட்செல் மெக்லனகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அந்த அணி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மிட்செல் மெக்லனகன். இவர் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடியதை விடவும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக ஆடிய அவர் 56 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
நல்ல உயரத்தில் இருந்து பவுலிங் செய்வதால், இவரின் பவுன்சர் பந்துகளை பேட்ஸ்மேன்கள் அடிக்க கஷ்டப்படுவார்கள். பும்ரா மற்றும் மலிங்கா ஆகியோருக்கு பின் மும்பை அணியின் மிகச்சிறந்த பவுலர் மிட்செல் மெக்லனகன் தான். இவரது இடத்தை போல்ட் மூலம் மும்பை அணி சில ஆண்டுகள் நிரப்பினாலும், இதுவரை முழுமையாக மும்பை அணியால் நிரப்ப முடியவில்லை.
இந்த நிலையில் மிட்செல் மெக்லனகன் மீண்டும் மும்பை அணியுடன் இணைந்துள்ளார். வீரராக அல்லாமல் பவுலிங் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் ஐஎல்டி20 லீக் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மும்பை எமிரேட்ஸ் அணிக்காக பயிற்சியாளர் குழுவை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில் தலைமை பயிற்சியாளராக ராபின் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பை அணி நிர்வாகத்தில் 2010ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் அண்மையில் உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஆலோசகராக சிறப்பாக பணியாற்றி இருந்தார்.
அதேபோல் பவுலிங் பயிற்சியாளராக மிட்செல் மெக்லனகனும், துணை பயிற்சியாளராக வினய் குமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல், ஐஎல்டி20 லீக், எஸ்ஏ20, டபிள்யூபிஎல் மற்றும் எம்எல்சி லீக் தொடர் என்று 5 அணிகளை உலகம் முழுவதும் வாங்கியுள்ளது. இதன் தலைமை நிர்வாகியாக ஜெயவர்தனே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.