தோனி எனக்கு குடுத்த முக்கிய அட்வைஸ் இதுதான்.. ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பின்னர் – ரிங்கு சிங் பேட்டி
கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியின் பல்வேறு வெற்றிக்கு உதவிய ரிங்கு சிங்கிற்கு கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதோடு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவருக்கு பினிஷர் இடமே வழங்கப்பட்டு வரும் வேளையில் அதனை அவர் கச்சிதமாக செய்து வருகிறார்.
இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 69 ரன்கள் சராசரியுடன், 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 278 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்தியாவாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி பின் வரிசையில் களமிறங்கும் ரிங்கு சிங் தனது விக்கெட்டை எளிதாக விட்டுக் கொடுக்காமல் போட்டி முடித்துக் கொடுத்தும் வருகிறார்.
அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான அணி 158 ரன்கள் குவிக்க பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் 13.5 ஓவரில் 117 ரன்கள் இருந்தபோது நான்காவது விக்கெட்டாக ஜிதேஷ் சர்மாவை இழந்தது.
ஒருபுறம் ஷிவம் துபே அதிரடி காட்டியதால் சற்று நிதானமாக ஆட்டத்தை கையாண்ட ரிங்கு சிங் 9 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்து அவருக்கு உறுதுணையாக இருந்து போட்டியையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். ரிங்கு சிங் விளையாடி உள்ள பெரும்பாலான ஆட்டங்களில் அவர் பேட்டிங்கிற்கு வந்தால் நாட் அவுட் ஆகவே இருந்து வருகிறார்.
இப்படி சர்வதேச போட்டிகளில் மிகச் சிறப்பான பினிஷிங் கொடுத்து வருவது குறித்து ரிங்கு சிங் பேசுகையில் கூறியதாவது : 6-ஆம் இடத்தில் களமிறங்கி போட்டியை முடித்துக் கொடுப்பது என்னுடைய பழக்கம் ஆகிவிட்டது. அந்த வேலையை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி. நான் 6-ஆம் இடத்திலேயே பேட்டிங் செய்ய விரும்புகிறேன். மேலும் நிறைய பந்துகளை எதிர்கொள்ள கூடாது, நிறைய ரன்களை அடிக்க வேண்டிய சூழலும் வரக்கூடாது என்று எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
ஏனெனில் பினிஷராக களமிறங்கும் போது நமக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பந்தும், ஒரு குறிப்பிட்ட அளவு ரன்கள் மட்டுமே கிடைக்கும். அதனை முடித்துக் கொடுப்பது மட்டுமே என்னுடைய வேலை. ஏற்கனவே பினிஷிங் குறித்து தோனி என்னிடம் பேசி இருக்கிறார். அப்போது பந்திற்கு மரியாதை கொடுத்து பொறுமை காக்க வேண்டும். அதே வேளையில் பேட்டிங் செய்யும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்திற்கு ரியாக்ட் கொடுத்து அடித்தால் நிச்சயம் போட்டியை முடிக்க முடியும் என்றும் அவர் எனக்கு அட்வைஸ் கொடுத்திருந்தார். அதையே நான் பாலோ செய்து வருகிறேன் என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.