“சச்சினின் நிறைய சாதனைகள் உடைய போகிறது.. கோலி விடமாட்டார்” – வெஸ்ட் இண்டீஸ் லெஜென்ட் பேச்சு!
1970களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை உச்சத்துக்கு கொண்டு வந்த கேப்டன் கிளைவ் லாயிட். அவருடைய தலைமையில் முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
மேலும் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிடம் கோப்பையை இழந்தது.
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டின் பெருமைகள் இவருடைய கேப்டன்சி காலகட்டத்தில் உருவானவை. பிறகு அவை 1990 வரை நீண்டது. ஆனால் பல தீவு கூட்டங்களை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தி ஆரம்பித்தவர் இவரே.
தானே முன் நின்று வீரர்களை சேர்த்து, அவர்களை ஒரே மன நிலைக்குள் கொண்டு வந்து, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஒரு உணர்வுபூர்வமான கருத்தாக மாற்றி, கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸ் அணியை மிகப்பெரிய அணியாக கொண்டு வந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் என்பது பல தீவுக் கூட்டங்கள் அதாவது பல நாடுகள். எனவே அவர்களுக்கு தனிப்பட்ட தேசிய உணர்வு என்று எதுவும் கிடையாது. இதனால் விளையாடும் ஊக்கம் குறைவாக இருக்கும். இந்த இடத்தில்தான் கிளைவ் லாயிட் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
கிரிக்கெட் குறித்து பேசி இருந்த அவர் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் ரிச்சர்ட்ஸ் இருவரும் இரு வேறு வகையான வீரர்கள். எனவே இதில் எந்த ஒப்பிடும் கிடையாது. விராட் கோலி நீண்ட நேரம் கிரிக்கெட் விளையாடக் கூடியவர். அவர் கைகளில் நிறைய நேரம் இருக்கிறது. எனவே அவர் சச்சினின் பல சாதனைகளை எதிர்காலத்தில் முறியடிக்க போகிறார். அவருக்கு அந்த திறமையும் இருக்கிறது.
டி20 கிரிக்கெட் என்பது ஒரு கண்காட்சி. பந்தை மைதானத்திற்கு வெளியே அடிப்பது என்பது மிகவும் சுலபம். ஆனால் இங்கிலாந்தின் வானிலையில் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகவும் கடினம். அதனால்தான் அங்கே போய் கிரிக்கெட் விளையாடி கற்றுக்கொள்ள சொல்கிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் கடந்த முறை உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. அப்படி தகுதி பெற முடியாமல் போனது மிகவும் துரதிஷ்டவசமானது. ஆனால் அவர்களால் மீண்டும் உலக கோப்பை தொடருக்கு வர முடியும்” என்று அழுத்தமாக கூறி இருக்கிறார்!