தங்கத்தில் காரை உருவாக்கினாலும் வாங்குவதற்கு ஆள் இருக்கும் போலயே!! ரோல்ஸ்-ராய்ஸ் செம்ம ஹாப்பியா இருக்கு!
செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடியும் அளவிற்கு கோடிகளில் விலைக் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார்கள் கடந்த 2023ஆம் ஆண்டில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் புள்ளி விபரங்களுடன் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பணக்காரர்களே வாங்க ஏங்கும் கார்களாக ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு ரோல்ஸ்-ராய்ஸ் காரும் தனி கவனத்துடன், பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரோல்ஸ்-ராய்ஸ் காரும் ஏறக்குறைய 6 மாத கால உருவாக்கத்திற்கு பின்பே கஸ்டமரின் கைக்கு வந்துச் சேருகின்றன.
ஏனெனில், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் ஒரு சில பாகங்களுக்கு, ஓவியம் தீட்டுவதுபோல் கையாலேயே பெயிண்ட் செய்யப்படுகிறது. இவ்வாறு பார்த்து, பார்த்து உருவாக்கப்படுவதினாலேயே ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் விலைகள் பல கோடி ரூபாய்களில் நிர்ணயிக்கப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய கார்களை வாங்குவதற்கும் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கின்றனர் என்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயம்.
உலகளவில் கடந்த 2023ஆம் ஆண்டில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் கார்கள் விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸின் முதல் எலக்ட்ரிக் காரான ஸ்பெக்டருக்கும் நிறைய நாடுகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து வரவேற்பு கிடைக்க ஆரம்பித்து உள்ளது.
ரோல்ஸ்-ராய்ஸ் கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 6,032 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது. ஜெர்மனியை தாயகமாக கொண்டு கடந்த 119 வருடங்களாக ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த 119 ஆண்டுகால வரலாற்றில் இதற்குமுன் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இத்தனை கார்களை ஒரே வருடத்தில் விற்பனை செய்ததே கிடையாது.
2022ஆம் ஆண்டிலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், அந்த ஆண்டில் மொத்தமாக 6,021 ரோல்ஸ்-ராய்ஸ் கார்களே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த 2023ஆம் ஆண்டில் 11 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் அதிகமாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு உள்ளன.
ரோல்ஸ்-ராய்ஸின் மிக பெரிய சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. அதற்கடுத்து, சீனாவில் அதிக எண்ணிக்கையில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் மாற்றம் நிகழ்ந்தது. அதாவது, 2010ஆம் ஆண்டில் இருந்து இந்த பதவியை வகித்துவந்த டோர்ஸ்டென் முல்லர்-ஒட்வோஸ் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் ரோல்ஸ்-ராய்ஸில் இருந்து வெளியேறினார்.
கடந்த 13 ஆண்டுகளில், ரோல்ஸ்-ராய்ஸின் பல வெற்றிகளுக்கு டோர்ஸ்டென் காரணமாக இருந்துள்ளார். டோர்ஸ்டெனின் இடத்திற்கு புதிய நிர்வாக இயக்குனராக கிறிஸ் ப்ரவுன்ரிட்ஜ் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். சுமார் 119 வருடங்களாக செயல்பட்டுவரும் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் 1998ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ குழுமத்தில் ஓர் அங்கமாகியது.