வேலையை காட்டிய ஆம்னி பஸ்கள்.. தென் மாவட்டங்களுக்கு போக பிளான் பண்ணுபவர்களுக்கு பெரிய ஷாக்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது வெள்ளம் முடிந்து இயல்பு நிலை திரும்பி வருவதாலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலம் என்பதாலும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.
சென்னையை புரட்டி போட்ட பேய் மழை கடந்த வாரம் தென் மாவட்டங்களை பிரித்து மேய்ந்தது. கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கொட்டி தீர்த்த மழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல்லை, தூத்துக்குடியில் பேய் மழை கொட்டியது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் உள்பட நெல்லை நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.தூத்துக்குடி மாவட்டத்தின் நிலையோ இதை விட மோசமாக இருந்தது. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் கொட்டிய 95 செ.மீட்டர் மழையால் அந்த நகரமே தனித்தீவானது.
அதுபோக ஸ்ரீவைகுண்டம், முக்கானி, புன்னக்காயல் என பல பகுதிகளில் வெளி உலக தொடர்பு இன்றி துண்டிக்கப்பட்டது. வீடுகளுக்குள் பல அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்தது. சென்னை வெள்ள பாதிப்பை டிவியில் பார்த்து கவலைப்பட்டு கொண்டிருந்த தென் மாவட்ட மக்களை பேரிடியாக அதிரவைத்தது இந்த மழை. மழை விட்டு ஒருவாரம் நெருங்கிவிட்ட நிலையில் தற்போதுதான் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி விட்ட போதிலும், தூத்துக்குடியில் இன்னமும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகையும் இந்த ஆண்டு தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் களையிழந்து காணப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் என்ன ஆனதோ ஏது ஆனதோ என பரிதவிப்புடன் காணப்பட்டனர்.
மின்சாரம் இல்லாததாலும், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் சொந்தங்களை தொடர்பு கொண்டு பேசவும் முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், பெருமழையின் போது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற ஆம்னி பேருந்துகள், அரசுப்பேருந்துகளும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்றும், இயல்பு நிலை திரும்பியதும் உறவினர்கள் வீட்டுக்கு செல்லலாம் என்றும் காத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது சென்னையில் இருந்து பேருந்துகள் இயங்க தொடங்கின. ஆனால், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வெள்ளம் முடிந்து இயல்பு நிலை திரும்பி வருவதாலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலம் என்பதாலும் மக்கள் சொந்த ஊர்களுக்கு அதிகம் பேர் புறப்பட தொடங்கியுள்ளனர்.
ஆனால், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 2,000, 3 ஆயிரம் என கட்டணம் ரெட் பஸ் இணையத்தளத்திலே காண்பிக்கிறது. இதைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.