கமலுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி… எந்தப் படம் தெரியுமா?
மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முதல்முறை கமலுடன் இணைந்து நடிக்கிறார். இதற்கான அறிவிப்பை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல்ஸ் வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் முடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. படிப்புடன் மாடலிங் செய்து வந்த இவர், 2017 இல் மலையாளத்தில் நண்டுகளுடெ நாட்டில் ஓரிடவேளா படத்தில் அறிமுகமானார். நிவின் பாலி, லால், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் நடித்த அப்படத்தை அல்தாஃப் சலீம் படத்தை இயக்கினார். அதே ஆண்டு ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியான மாயநதி ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல நடிகை என்ற பெயரை சம்பாதித்துத் தந்தது. டோவினோ தாமஸ் இதில் நாயகனாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா லட்சுமி 2019 இல் விஷாலின் ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். மலையாளத்தில் கிடைத்த பெயர் தமிழில் அவருக்கு கிடைக்கவில்லை. விஷ்ணு விஷாலுடன் நடித்த கட்டா குஸ்தி அந்தக் குறையைப் போக்கியது. கடைசியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி வேடத்தில் நடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
துல்கர் சல்மான், ஜோஜு ஜார்ஜ், அபிராமி ஆகியோரை தொடர்ந்து இப்படத்தில் மற்றொரு மலையாள நடிகர் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். இது கமலுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படமாகும்.