கும்பாபிஷேகத்திற்கு ரெடியாகும் அயோத்தி ராமர் கோயிலுக்கு குவியும் பரிசுகள்.. என்னென்ன தெரியுமா?
அயோத்தியில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் ராமர் கோயிலுக்கு, இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பரிசுகள் குவிந்து வருகின்றன. அது குறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்…
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது பிரமாண்ட ராமர் கோயில்… இதற்கு முன்னதாக, உலகம் முழுவதிலும் இருந்து அயோத்தியில் குவிந்து வருகின்றன ஆச்சரியமூட்டும் பலவிதமான பரிசுகள்…
1. ராமர் கோயிலுக்காக, 10 அடி உயரத்தில், 400 கிலோ எடையில் பிரமாண்ட பூட்டு ஒன்றை பரிசாக அளித்தார், உத்தரபிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த பூட்டுத் தொழிலாளி…
2. பல மாதங்களாக பூட்டையும் சாவியையும் தயாரித்து, அதை பெருமிதத்தோடு அயோத்திக்கு அனுப்பியுள்ளார் சத்யபிரகாஷ் சர்மா…
3. அதேபோல், 2,100 கிலோ எடையில் மணியை தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள், அதே உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள்… அஷ்டதாது எனப்படும் 8 விதமான உலோகங்களால் உருவாக்கப்பட்ட இந்த மணியை தயாரிக்க 2 ஆண்டுகள் ஆனதாக கூறியுள்ளார்கள் அந்த தொழிலாளர்கள்…
4. மறுபுறம், 5000 அரிய வகை வைரங்கள் மற்றும் 2 கிலோ வெள்ளியால் உருவாக்கப்பட்ட ஆபரணம் ஒன்றை வழங்கியுள்ளார் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி…
5. ராமாயணத்தை மையமாக வைத்து, 40 கைவினை கலைஞர்கள், 35 நாட்கள் வடிவமைத்த ஆபரணம் ஒன்றை, ராம் மந்திர் அறக்கட்டளைக்கு பரிசாக வழங்கினார் கவுசிக் காகதியா…
6. இதனிடையே, 1100 கிலோ எடையில் விளக்கு ஒன்றை வடிவமைத்து பரிசாக வழங்கியுள்ளார் வதோதராவில் வசிக்கும் அரவிந்த்பாய் என்ற விவசாயி…
7. மிதிலா மற்றும் அயோத்திக்கு இடையே இருக்கும் புனிதமான தொடர்பை குறிக்கும் வகையில், தங்க வில் மற்றும் அம்பை பரிசாக அளித்துள்ளது பாட்னா மகாவீர் கோயில் அறக்கட்டளை…
8. அதேபோல், 3,610 கிலோ எடையில் 108 அடி நீள ஊதுபத்தியை தயாரித்து வழங்கியுள்ளார் விஹா பர்வாத் என்ற வதோதராவாசி…
9. இதனிடையே 8 நாட்களின் நேரத்தை, ஒரே சமயத்தில் காட்டும் புதிய வகை கடிகாரத்தை வடிவமைத்து, பரிசாக வழங்கியுள்ளார் லக்னோ காய்கறி வியாபாரி…
10. இந்தியா, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளின் நேரத்தை ஒரே கடிகாரத்தில் பார்க்கலாம் என்கிறார் அதை வடிவமைத்த அனில்குமார் சாஹு…
11. இதேபோல், சீதையின் பிறப்பிடமாக கருதப்படும் நேபாளத்தில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகளை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளது ஜனக்பூர் தாம் ராம்ஜானகி கோயில் நிர்வாகம்…
12. வெள்ளிக் காலணிகள், ஆபரணங்கள், ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளை 30 வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது அந்த கோயில்…
13. கோயிலுக்கு இத்தனை பரிசுகள் குவியும் அதே நேரத்தில், கும்பாபிஷேகத்திற்கு வருபவர்களுக்காகவும் குவிந்து வருகின்றன பல பரிசுகள்…
14. கும்பாபிஷேக நாளில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் லட்டுகளை தயாரித்து அனுப்புகிறது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்…
15. அதேபோல், 7000 கிலோ எடையில் ராம் அல்வா தயார் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் நாக்பூர் சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர்…
16. அத்துடன் 200 கிலோ லட்டுகளை தயாரித்து வழங்க முன்வந்துள்ளது மதுராவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான்…
17. இப்படி ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்து வருவதால், இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது ராமர் கோயில் கும்பாபிஷேக விழா…