வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயுமா ?

அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 9-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கோர்ட்டில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது. எனவே யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அவர்கள் ஏற்கனவே செய்த பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும். பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. மேலும் 19-ந்தேதி நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள நியாயமான கோரிக்கைகளை தீர்த்து தர முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, “இது அரசின் முடிவு. கோர்ட்டு உத்தரவை மதித்து நடவடிக்கை கைவிடப்படும். தற்போது பொங்கல் பஸ்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறோம்”என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *