‘மும்பை அணியில் கேப்டன்ஷிப் மாற்றம் செய்தது சரிதான்’ – கவாஸ்கர் கருத்து…
மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியில் கேப்டன்ஷிப் மாற்றம் செய்யப்பட்டது சரிதான் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை அணி இருந்து வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா ட்ரேட் முறையில் மும்பை அணிக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த கேப்டன்ஷிப் மாற்றம் என்பது சரியான நடவடிக்கை தான் என கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. முன்பு அவர் அதிரடியாக ரன்களை குவிப்பார். ஆனால் கடந்த 2 சீசன்களில் அவர் தடுமாறி வருவதை பார்க்க முடிந்தது.
மேலும் கடந்த 2 ஐபிஎல் தொடர்களிலும் மும்பை அணி 9 மற்றும் 10வது இடத்தை பிடித்திருக்கிறது. எனவே கேப்டன்ஷிப்பை மாற்றியது சரியான நடவடிக்கையாக நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.