இது தெரியுமா ? இந்த கீரையில் துவையல் செய்தால் பல பிரச்சனைகள் தீரும்..!
ரத்த சோகை இருப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கீரை வகையும் இது.குறிப்பாக பெண்கள் இந்த கீரை வகையை துவையலாக அல்லது வேறு வகையில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் உடல் பலம் பெறுவார்கள்.
கீரை வகையிலேயே இந்த கீரை ராஜாவாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. அப்படி எந்த கீரையை வைத்து நாம் துவையல் செய்யப் போகிறோம்? அதை எப்படி செய்வது?
அது வேற எதுவும் இல்லைங்க. நம்ம வீட்டு தோட்டத்தில் வளர்க்கும் முருங்கைக்கீரை தான் அது.
முருங்கைக் கீரை துவையல் செய்ய தேவையான பொருட்கள்: 1 கப் – முருங்கைக்கீரை (இளசு), 50 கிராம் – உளுத்தம் பருப்பு, 10 – காய்ந்த மிளகாய், 1 – வெங்காயம், 4 பல் – பூண்டு, 1/2 டீஸ்பூன் – கடுகு, புளி – சிறிதளவு எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவிற்கு.
முதலில் முருங்கைக் கீரையை உருவி சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வானலியை வைக்கவும். அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய்களை தாளித்து உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக் கீரை மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சிறிதளவு புளி போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும். அதன் பின்னர் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சேர்த்தால் முருங்கைக் கீரை துவையல் அட்டகாசமான சுவையில் தயாராகி விட்டிருக்கும்.
முருங்கைக் கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடல் சூடு தணியும். ரத்த விருத்தி உண்டாகும். சுவாச கோளாறுகள் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கை, கால், உடல் சோர்வு நீங்கும். அடிக்கடி தலைவலி வருபவர்களுக்கு இதனை செய்து கொடுத்தால் விரைவாக பிரச்சனை தீரும்.