போகி நாளில் பொதுமக்கள் இதை செய்ய வேண்டாம்.. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். அதன்படி இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை மீண்டும் தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இந்த செயலால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் ஆன துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன் இந்த அடர் புகை காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர் புகையால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. இந்த அடர் நச்சு வாயுக்களால் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு முன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் கடந்த ஆண்டுகளில் அடர்புகையை ஏற்படுத்தும் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது..

இந்த ஆண்டும் பொதுமக்கள் புகையில்லா போகியை கொண்டாட வேண்டும். போகி பண்டிகையின் போது சென்னையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் போகி பண்டிகைக்கு முந்தைய நாள் மற்றும் போகி நாளன்று 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று தரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *