நிதி நிறுவன மோசடி.. ”அவர்களுக்கு” தெரியாமல் நடக்க வாய்ப்பேயில்லை! பாயிண்டை பிடித்த அன்புமணி
சென்னை: தமிழ்நாட்டில் ஆரூத்ரா , எல்பின்ஸ், மதுரம் புரமோட்டர்ஸ், வேலூர் ஐ.எஃப்.எஸ்., என இன்னும் ஏராளமான நிதி நிறுவன மோசடிகள் நடைபெற்றிருக்கும் நிலையில், பணத்தை மீட்கும் விஷயத்தில் காவல்துறை காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நிதி நிறுவன மோசடி நடக்க வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் நிதி நிறுவன மோசடிகளுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிரடி காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
”தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறுகச் சிறுக சேர்த்து செலுத்திய பணத்தை மீட்கும் விஷயத்தில் காவல்துறை காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
மதுரை சின்ன செக்கிக்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு மதுரம் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் புதிய நிதி நிறுவனம் ஒன்று கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை, வேலூர், விழுப்புரம், சென்னை, ராமநாதபுரம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த நிறுவனத்தின் கிளைகள் திறக்கப்பட்டன. முகவர்கள் மூலம் பொதுமக்களை சந்தித்த இந்த நிறுவனத்தின் நிர்வாகம், தங்கள் நிதிநிறுவனத்தில் தவணைமுறையில் பணம் கட்டினால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கட்டிய தொகைக்கு மேல் 50% சேர்த்து வழங்கப்படும் இல்லாவிட்டால் அதற்கு இணையான மதிப்புக்கு நிலம் வழங்கப்படும் என்று ஆசை காட்டினர். இதை நம்பி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பணம் கட்டத்தொடங்கினர்.