“கனிமொழி மேளம் வாசிக்க..” கோலாகலமாக தொடங்கும் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா!

சென்னை: இந்தாண்டு சென்னை சங்கமம் விழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மொத்தம் 18 இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இந்த பொங்கல் விழா நடக்கிறது.

 

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் விழாவைக் கொண்டாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அதேபோல பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னையில் சென்னை சங்கமம் நடைபெறுவது வழக்கம்.. அதேபோல இந்தாண்டும் தீவுத்திடல் அரங்கில் சென்னை சங்கமம் தொடங்க உள்ளது.

சென்னை சங்கமம்: தீவுத்திடல் அரங்கில் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் 40 வகையான கலைகளுடன், ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா ‘ நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கலை நிகழ்வுகளைத் தொடங்கி வைக்கிறார்.

அதனை முன்னிட்டு நேற்று (12/01/2024) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற கிராமியக் கலைஞர்களின் ஒத்திகையைப் பார்வையிட்ட திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, கலைஞர்களின் மேளத்தை வாசித்து மகிழ்ந்தார். கலைஞர்களுடன் இயல்பாக உரையாடியதும், அவர்களின் இசைக்கருவிகளை உரிமையுடன் வாங்கி வாசித்ததும்

இசைக் கலைஞர்களுக்கு உற்சாகத்தைத் தந்தது.

எங்கே நடக்கிறது: சென்னையில் மாநகராட்சி பூங்காக்கள், தீவுத் திடல், விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள் என 18 இடங்களில் 4 நாட்களுக்கு (14.01.2024 முதல் 17.01.2024 வரை) நடக்கவிருக்கும் இந்த கலை விழாக்களில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பொங்கல் திருநாளைச் சிறப்பிக்கும் விதமாக, அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் கலை பண்பாட்டுத் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2011 முதல் சென்னை சங்கமம் விழா 10 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் 2021-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், சென்னை சங்கம திருவிழாவை நடத்துவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு முதலே சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது. இந்தச் சூழலில் தான் இன்று சென்னை சங்கமம் நிகழ்ச்சியைப் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *