குவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் போலீசார்.. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் ஆக்ஷன்! டிஜிபி வார்னிங்!
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நாட்களில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கடைவீதிகளில் துணிகள் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும் என்பதால் அத்தகைய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் கோயில் திருவிழாக்களின் போதும், காணும் பொங்கல் அன்றும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய அளவில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.