“அரசியல் லாபத்துக்காக ராமர் கோயில் திறப்பை பாஜக பயன்படுத்துவது வெட்கக்கேடு” – யெச்சூரி
புதுடெல்லி: அரசியல் லாபத்துக்காக ராமர் கோயில் திறப்பை பாஜக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ‘அரசியல் லாபத்துக்காக ராமர் கோயில் திறப்பை பாஜக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது. மக்களின் நம்பிக்கை மற்றும் மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துகின்றனர். அரசின் திட்டங்கள் மற்றும் நிதிகளை தனது தனிப்பட்ட சேவை மூலம் மக்களுக்கு வழங்குவதைப் போல் பிரதமர் மோடி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறும்போது, ‘நான் ராமர் கோயிலுக்கு செல்வதற்கு யாரும் அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது கோயிலுக்கு சென்று வழிபடுவேன். இது நம்பிக்கை தொடர்பானது. மதம் தொடர்புடைய உணர்ச்சிகரமான ராமர் கோயில் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது மிகவும் தவறானதாகும்’ என்றார்.
அதேவேளையில், ‘பகவான் ராமர் மீது எதிர்க்கட்சிகளுக்கு என்ன பகை என்பது புரியவில்லை. அயோத்தி ராமர் கோயில் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அவதூறாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் பாபர், அப்சல் குருவை வழிபட தயாராக இருப்பதாகவே தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்’ என்று மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங், பிஹார் முதல்வர்நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்ட காங்கிரஸ் கட்சி, ‘ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேநேரம் கட்டுமானப் பணி முழுமையாக முடியாத நிலையில், ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காக அவசரமாக கோயில் திறப்பு விழாவை நடத்துகின்றனர். இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என தெளிவாக தெரிவதால், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.