பரபரப்பாகும் இந்தியா கூட்டணி.. இன்று முக்கிய ஆலோசனை!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியா கூட்டணி பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் யார் என இதுவரை முடிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணியில் சுமார் 26 கட்சிகள் உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
இருந்தாலும், இந்த கூட்டணியில் ஒருசில கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன. ஆனால், பாஜகவை வீழ்த்துவதே நமது நோக்கம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தும் வருகின்றனர். அந்தவகையில், இந்தியா கூட்டணி கட்சிகள் பீகார், பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது.
இந்த கூட்டங்களில் பிரதமர் வேட்பாளர் யார் என்று குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்றும் முன்மொழியப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், பிரதமர் வேட்பாளர் குறித்து பின்னர் பார்க்கலாம் என தெரிவித்த கார்கே, தற்போது தொகுதி பங்கீடு தான் முதன்மையானது, தொகுதிப் பங்கீட்டை ஜனவரி மாதத்துக்குள் முடிவுசெய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து, மராட்டியத்தில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுபோன்று பரபரப்பாக செயல்பட்டு வரும் இந்தியா கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். காணொளி வாயிலாக நடைபெற உள்ள கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.