“மூன்றே வார்த்தை!” கோயிலை தூய்மை செய்த பின்.. பார்வையாளர்கள் ஏட்டில் பிரதமர் எழுதியது என்ன தெரியுமா
டெல்லி: பிரதமர் மோடி காலாராம் கோயிலுக்குச் சென்று நேற்று பூஜை செய்த நிலையில், இது தொடர்பாக மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22இல் நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரமே விழாவுக்கு உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாடு முழுக்க உள்ள பயணிகள் இங்கே எளிதாக வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
பிரதமர் மோடி: இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை கோதாவரி நதிக் கரைக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் அங்கே உள்ள கோதாவரி பஞ்சகோடி புரோகித் சங்க அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதிய விஷயம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிராவிற்குச் சென்றிருந்தார். அங்கே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து கோதாவரி நதி கரையோரம் அமைந்துள்ள புகழ்பெற்ற காலாராம் கோவிலுக்கும் சென்றார். இந்த கோயில் வளாகத்தைத் தான் பிரமதர் மோடி நேற்று சுத்தம் செய்திருந்தார்.
ஜெய் ஸ்ரீ ராம்: இதற்கிடையே அந்த கோயில் வாளகத்தில் அவர் எழுதிய விஷயம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பார்வையாளர்கள் ஏட்டில் “ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதியுள்ளார். அவர் “ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிய ஃபோட்டோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
இது குறித்து அகில பாரதிய அமைப்பின் மூத்த துணைத் தலைவர் சதீஷ் சுக்லா கூறுகையில், “இந்த இடத்திற்கு வந்து ‘கங்கா பூஜை’ செய்யும் முதல் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார். அவர் “ஜெய் ஸ்ரீ ராம்’ என்று பார்வையாளர் புத்தகத்தில் எழுதிச் சென்றார்.. பிரதமர் ஆற்றங்கரையில் உள்ள புனிதமான ராமர் குடிலுக்குக்குள் நுழைந்து இங்கே பூஜை செய்தார்.
வேண்டுதல் என்ன: பிரதமர் மோடி சமஸ்கிருதத்தில் மந்திரம் செய்தார். அவர் எப்போதும் பாரத மாதாவுக்கு சேவை செய்வேன், மேலும் இந்தியாவை உயர் நிலைக்குக் கொண்டு செல்ல அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வலிமை தருமாறு பிரார்த்தனை செய்தார். மேலும் விவசாயத்தை நம்பி இருக்கும் இந்த நாட்டிற்குத் தேவையான மழையைத் தருமாறும் அவர் வேண்டினார்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி நேற்றைய தினம் இந்த காலாராம் கோயிலுக்குச் சென்று சுத்தப்படுத்தினார். கோயில் வளாகத்தை மாப் போட்டுத் துடைத்துத் தூய்மைப்படுத்தினார். அந்த வீடியோ இணையத்தில் நேற்று டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.