பொங்கல் பண்டிகை! ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம்.. டோல்கேட்டுகளில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுப்பு!
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோரால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழர் திருநாள் தை பொங்கல் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்றாலே 4 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அதிலும் கிராமப்புறங்களில் மாட்டு பொங்கல் விமரிசையாக கொண்டாடுவார்கள்.
பொங்கலுக்கு வண்ண வண்ண கோலங்களை போட்டு குண்டும் குழியுமான சாலைகளையும் அழகாக்கி அசத்துவார்கள். மேலும் கோலப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படும். பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை வருகிறது.
அதாவது சனி, ஞாயிறு பொதுவான விடுமுறை, திங்கள்- பொங்கல், செவ்வாய்- மாட்டு பொங்கல், புதன்- காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதில் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் லீவு போட்டுவிட்டால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 9 நாட்கள் விடுமுறையாகும். இதையடுத்து சென்னை மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கிறார்கள்.
இதனால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பல்லாவரம் சந்தையால் கூடுதல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் அதிகம் பயன்படுத்தும் ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. சென்னை விமான நிலையம் முதல் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என கார்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
அது போல் அரசு சார்பில் ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துகளிலும் மக்கள் பயணம் செய்தனர். சென்னை போரூர், ஆற்காடு சாலை, சர்வீஸ் சாலை, முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. நசரத்பேட்டை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம், திருமழிசை உள்ளிட்ட இடங்களில் 2 கிலோமீட்டர் அளவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட இடங்களில் 5 சிப்காட்டுகள் உள்ளன. இங்கு பணிபுரிவோரும் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை, வேலூர் பகுதிகளில் இருபுறமும் வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அது போல் அத்திப்பள்ளி சுங்கச் சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.