முதல் படமே வாழ்நாள் சாதனை: அன்பறிவ் சகோதரர்கள் நெகிழ்ச்சி!
மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்கள்.
பின்னர் கேஜிஎஃப் படத்துக்காக தேசிய விருது பெற்று இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.
பின்னர் லோகேஷ் கனகராஜ் படங்களான மாநகரம், கைதி. மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் மூலம் மிகவும் புகழ்பெற்றுள்ளார்கள். தற்போது அன்பறிவ் சகோதரர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள்.
கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் 237வது படத்தினை அன்பறிவ் சகோதர்கள் இயக்குகிறார்கள் என நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில் கமலின் 237வது படத்தினை இயக்குவது குறித்து அன்பறிவு சகோதரர்கள், “இத்தனை நாள்களாக சினிமாவை எங்களது கண்களின் வழியாக பார்த்து வந்தோம். தற்போது சினிமா தன் கண் வழியாக எங்களைப் பார்க்கிறது. எங்களுக்கு சினிமா என்பது கமல்சார்தான். இது எங்களுக்கு வாழ்நாள் சாதனை. சிறந்தவற்றை வழங்குவோமென சத்தியம் செய்கிறோம்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளனர்.