13 வயதில் பிஸ்னஸ்.. ரூ.100 கோடி சம்பாதிக்கும் சிறுவன்..!!
வயது ஒரு பொருட்டல்ல என்று கூறுவார்கள். இந்த பழமொழி ஒரு டீன் ஏஜரின் வாழ்க்கையில் மிகச் சரியாகப் பொருந்தியுள்ளது.
படிப்பு, மார்க் என கவலையில் இருக்கும் காலத்தில் மிகச் சிறிய வயதிலேயே தனக்கென ஒரு சொந்த கம்பெனியை திலக் மேத்தா உருவாக்கினார்.தனது 13 ஆவது வயதில் யாரும் நம்பமுடியாத செயலை திலக் மேத்தா செய்தார். ஒரு முறை தனது மாமா வீட்டுக்குச் சென்றிருந்த திலக் மேத்தா அங்கு தங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது தனது புத்தகங்களை மாமா வீட்டிலேயே மறந்து வைத்து விட்டோம் என்று. விரைவில் தேர்வுகள் நெருங்குகிறது என்றாலும் உடனடியாக அந்தப் புத்தகங்கள் தேவைப்படவில்லை. இருப்பினும் குழப்பத்தின் காரணமாக ஒரேநாளில் டெலிவரி செய்யக்கூடிய பார்சல் ஏஜென்சிகளை தொடர்பு கொண்டு தனது புத்தகங்களைக் கொண்டு வரமுடியுமா என்று விசாரித்தார். ஆனால் அதற்கான செலவு அதிகமாக இருந்தது அல்லது ஒரேநாளில் கொண்டு வரமுடியாதவாறு இருந்தது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட திலக் மேத்தா ஒரு சாமானியர் வேறு வழியில்லாத நிலையில் எப்படி ஒரு பார்சலைப் பெறுவது என்று யோசித்தார். இதைத் தொடர்ந்து அவர் Paper n parcels என்ற டெலிவரி சேவை நிறுவனத்தை தொடங்கினார். இந்தச் சேவையில் உள்ள செலவீனத்தை அறிந்த திலக் மேத்தா, மும்பையில் செயல்படும் டப்பாவாலா ஃபாஸ்ட் டெலிவரி பற்றி யோசித்தார். மும்பையின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு சாப்பாடு கேரியரை குறைந்த செலவில் கொண்டு செல்லும் டப்பாவாலா நிறுவன ஐடியாவை பின்பற்றலாம் என முடிவு செய்தார். தொடக்கத்தில் தந்தை தந்த நிதியை வைத்து டப்பாவாலாக்களுடன் கூட்டு சேர்ந்து குறைந்த விலையில் பார்சல்களை டெலிவரி செய்யும் சேவையை திலக் மேத்தா தொடங்கினார். 2018 ஆம் ஆண்டில் அவர் ஒரு ஆன்லைன் தளத்தைத் தொடங்கி ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸை நிர்வகித்தார்.அயராத முயற்சியினாலும் விடாப்பிடியான முனைப்பினாலும் அவர் தனது நிறுவனத்தை மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு சேர்த்தார். அவரது நிறுவனத்தின் வருவாய் ரூ.100 கோடியை எட்டியது. 200 நேரடி ஊழியர்கள், 300 டப்பாவாலாக்கள் சேர்ந்து தினமும் 1200 டெலிவரிகளை செய்தனர். அவரது தொழில் லாபத்தை ஈட்டியதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியது. 2021 ஆம் ஆண்டில் திலக் மேத்தாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.65 கோடி ஆனது. மாதம் அவருக்கு வருவாயாக ரூ. 2 கோடி கிடைத்தது. ஆக திலக் மேத்தாவின் சாதனை தொழில் பயணம் ஒரு 13 வயது சிறுவனின் கனவு புதுமைகளால் நனவானதை நிரூபித்தது. கடினமான உழைப்பும், உத்வேகமும் இருந்தால் சாதிப்பதற்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்பதை அறியலாம்.