`தை பிறந்தால் வழி பிறக்கும்!’ பொங்கல் பண்டிகை வழிபட ஒரு வழிகாட்டல் – பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும்.
தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் நம் மரபில் உண்டு. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தை முதல் நாளைப் பண்டிகையாகக் கொண்டாடுவது குறிப்பிடத் தக்கது.குறிப்பாக சூரிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைக் கணக்கிடும் மாநிலங்களில் இந்த நாள் முதன்மையான பண்டிகையாகத் திகழ்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் சூரியபகவான் மகர ராசிக்குள் பெயர்ச்சியாகும் தை முதல் நாளை சூரியனை வழிபட உகந்த நாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

ஶ்ரீசூரிய பகவான்

உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவானே. கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகிறது. அப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகை.

மகர சங்கராந்தி

சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் சூரியன் காலச் சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலத்தில் ஆண்டு தொடங்கும். இந்த ஆண்டை உத்தராயனம், தட்சிணாயனம் என இரண்டாகப் பிரிக்கிறார்கள். தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் உத்தராயனம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சிணாயனம் என்றும் அழைக்கப்படுகின்றன. நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நம்பிக்கை.

உத்தராயனம் தேவர்களின் பகல் பொழுது என்றும் தட்சிணாயனம் இரவுப் பொழுது என்றும் புராணங்கள் சொல்கின்றன. அந்த வகையில் தேவர்களின் பகல் பொழுதின் தொடக்கமான தை மாதத்தின் தொடக்கமே மகர சங்கராந்தி. சங்கராந்தி என்றால் நகர்தல் என்று பொருள். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நகர்வதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

பொங்கல் வழிபாடு என்பது ஒரு நாள் வழிபாடு அல்ல. பொங்கலுக்கு முன்தினமான மார்கழி மாதத்தின் கடைசித் தேதி போகிப் பண்டிகை என்று கொண்டாடுகிறோம். இது இந்திரனை வழிபடும் விழா என்கிறார்கள். தமிழகத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த நாளில் நிகழ வேண்டியது அவசியம் என்பது நம்பிக்கை. பொங்கல்

போகி அன்று வேண்டாதவற்றை வெளியில் வைத்துவிட வேண்டும். மாறாக அவற்றை எரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாஸ்திரத்தில் வேண்டாதனவற்றை எரிக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. ‘ப்ரக்ருதியை நம:’ என்ற மந்திரம் மகாலட்சுமியை இயற்கையின் வடிவானவள் என்று போற்றுகிறது. எனவே இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் சாஸ்திரம் முன்வைப்பதில்லை. எனவே வேண்டாத பொருள்களை வீட்டை விட்டுக்கு வெளியே முறையாக வெளியேற்ற வேண்டுமே தவிர எரித்து மாசு ஏற்படுத்தக் கூடாது.

தை முதல் நாள் பொங்கல் பண்டிகை. அன்று சூரியனை வணங்கிப் பொங்கலிட்டு கரும்பு, பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியன வைத்து வழிபட வேண்டும். வீட்டில் சூரிய ஒளிபடும் ஏதேனும் ஓரிடத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் சிறப்பு.

பூஜை செய்யும் இடத்தில் சந்திர, சூரியர்கள் கோலம் இட்டுக்கொள்ள வேண்டும். பொங்கல் பானையை நடுவே வைத்து சூரியனுக்கு தீபாராதனை காட்டிப்பின் நிவேதனம் செய்ய வேண்டும். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் செய்வதுவே வழக்கம். சில வீடுகளில் வெண்பொங்கலும் சேர்த்து செய்வார்கள்.

சூரிய பகவானைக் கண்டு வணங்குவதோடு பின்வரும் மந்திரங்களையும் சொல்லித் துதிக்கலாம்.

ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:

ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:

ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:

ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:

ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:

ஓம் அர்காய நம:

ஓம் பாஸ்கராய நம

இந்த மந்திரங்களை தைப்பொங்கல் நாளில் எத்தனை முறை சொல்கிறோமோ அவ்வளவு நன்மைகள் கைகூடும். சூரியன் ஆரோக்கியத்தின் அதிபதி. எனவே சூரிய வழிபாடு செய்வதன் மூலம் நம் ஆரோக்கியம் பெருகும். முன்னோர் ஆசி கிட்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *