காசு, பணம் கையில நிக்கலையா? நாம் செய்யும் தவறுகள் இதுதான்!
இளமையாக இருக்கும் பொழுது பொருளாதார சம்பந்தப்பட்ட சரியான முடிவுகளை எடுப்பது நமது எதிர்கால பொருளாதார நிலைப்பாட்டை சரியான முறையில் வழிநடத்துவதற்கு உதவும். புத்திசாலித்தனமாக அணுகும் பொழுது, இந்த முடிவுகள் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இதுவே நீங்கள் மோசமான தேர்வுகளை எடுக்கும் பொழுது நீங்கள் நினைத்த காரியங்களை சரிவர நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இளம் வயதில் இருக்கும் பொழுது பொருளாதார சம்பந்தப்பட்ட பொறுப்புடன் செயல்படுவது உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரக்கூடும். இளைஞர்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான சில பொருளாதார தவறுகள் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அதிகப்படியாக செலவு செய்தல்:
கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவது இன்று ஒரு வழக்கமான விஷயமாகி விட்டது. கிரெடிட் கார்டுகள் பல்வேறு விதமான சலுகைகள், கேஷ்பேக் போன்றவற்றை வழங்குகின்றன. எனினும் உங்கள் கிரெடிட் கார்டை நீங்கள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது தான் பிரச்சனை வருகிறது. கேஷ் பேக் அல்லது சலுகைகளுக்காக மட்டுமே நீங்கள் கிரெடிட் கார்டுகளை முதன்மையாக பயன்படுத்த வேண்டும். கிரெடிட் கார்டுகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது உங்கள் கடன் சுமையை அதிகரிக்கும்.
பிறருடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது:
உங்கள் உடன் பழகக்கூடிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அணிந்து வரும் உடை, மேக் அப் மற்றும் அவர்களின் ஆடம்பரமான பொருட்களை கண்டு அவற்றை நீங்களும் வாங்க வேண்டும் என்பதற்காக உங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்தல் கூடாது. இவ்வாறு தேவையில்லாத போட்டி போட்டுக் கொண்டே செலவு செய்வது அபாயகரமானதாகும்.
ஆடம்பரமான பொருட்களை அதிக அளவில் வாங்குவது:
நீங்கள் ஆடம்பரமான பொருட்களுக்கு அதிகப்படியான பணத்தை செலவு செய்யும் போது அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவதற்கு உங்களிடம் பணம் இல்லாமல் போகலாம். எனவே நீங்கள் செலவு செய்யும் போது உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம். இதன் மூலமாக நீங்கள் தேவையற்ற செலவுகள் செய்வதை தவிர்ப்பீர்கள். ஏதாவது ஒரு ஆடம்பர பொருள் வாங்க வேண்டும் என்று நினைத்தால், இரண்டு நாட்கள் நேரம் எடுத்துக் கொண்டு நன்றாக சிந்தியுங்கள். இந்த இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு அந்த பொருள் தேவையில்லை என்று கூட தோன்றலாம்.
சேமிப்பதை தவிர்ப்பது:
ஆடம்பர பொருட்கள் மீது அதிக பணத்தை செலவு செய்வதைக் காட்டிலும் சேமிப்பதற்கு இளைஞர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். ஸ்டாக் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட் அல்லது தங்கம் போன்றவற்றில் நீங்கள் முதலீடு செய்யலாம் அல்லது தபால் நிலையம் வங்கி போன்றவற்றில் சேமிப்பு திட்டங்களில் பங்கு பெறலாம். இது உங்களது பொருளாதார அடித்தளத்தை வலுவாக்குவதற்கு உதவும்.
எச்சரிக்கையுடன் செலவு செய்தல்:
சோஷியல் மீடியாவில் வலம் வரக்கூடிய டிரெண்டுகளை பார்த்து தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும் என்று உங்கள் மனம் தூண்டப்படலாம். ஆனால் அத்தியாவசியமில்லாத ஒரு பொருளை வாங்குவது நிச்சயமாக உங்களுக்கு இழப்புகளையே ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.