“60 ஆண்டுகளில் முதல்முறை..” குஜராத்தில் கிஃப்ட் சிட்டியில் மட்டும் மதுவுக்கு அனுமதி.. என்ன காரணம்
குஜராத் மாநிலத்தில் கிஃப்ட் சிட்டி என ஒரு நகரில் மட்டும் மது குடிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. எதற்காக அங்கே மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த காலங்களில் மது விலக்கு இருந்துள்ளன. இருப்பினும், அவை பல காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. இப்போது நமது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மது விற்பனைக்குத் தடை இல்லை.
வெகுசில மாநிலங்களில் மட்டுமே இன்னும் மது விலக்கு அமலில் இருக்கிறது. அப்படி மது விலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று தான் குஜராத்.
குஜராத்: 1960ஆம் ஆண்டில் குஜராத் உருவாக்கப்பட்டதில் இருந்தே அங்கே மது விலக்கு அமலில் இருக்கிறது. அங்கே வெளிநாட்டினர் மட்டும் மது குடிக்க பெர்மிட் வாங்கி மது குடிக்கலாம். 1960இல் தொடங்கி சுமார் 60 ஆண்டுகளாக அங்கே இந்தச் சட்டமே அமலில் இருக்கிறது.
முதல்முறை: இந்தச் சூழலில் முக்கிய நடவடிக்கையாக, குஜராத் தலைநகர் காந்திநகரில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் முதல் நிதிச் சேவை மையமான குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT) மது அருந்தக் குஜராத் அரசு அனுமதித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் குஜராத்தில் எந்தவொரு இடத்திலும் மது விலக்கு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை.
என்ன காரணம்: கிஃப்ட் சிட்டி எனப்படும் இந்த பகுதி பல்வேறு தொழில் தொடங்க ஏற்ற இடமாக இருக்கும். இங்கே முதலீடு செய்வோருக்கு நிதி ஊக்கத்தொகை தொடங்கிப் பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது. இது சிங்கப்பூர் போன்ற சர்வதேச நகரங்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கிஃப்ட் சிட்டி பகுதியில் தான் மதுவிலக்கைக் குஜராத் அரசு அறிவித்துள்ளது. கிஃப்ட் சிட்டியை அடுத்த தலைமுறைக்கான நிதி மற்றும் டெக் ஹப்பாக வளர்த்தெடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மது விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வு: இந்த கிஃப்ட் சிட்டி வழக்கமான நகரத்தைப் போல இல்லாமல் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குஜராத் அரசின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப மதுவுக்கு விதிக்கப்பட்ட முழு தடை என்பது இந்த பகுதியில் தளர்த்தப்படுவதற்காக அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்குச் சர்வதேச வணிக சூழலை வழங்கும் கிஃப்ட் சிட்டி பகுதியில் மது அருந்துவதை அனுமதிக்கும் வகையில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளும் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
சிறப்பு பெர்மிட்: அதன்படி கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் அனைவருக்கும் மது குடிக்கத் தேவையான பெர்மிட் வழங்கப்படும், இதன் மூலம் அவர்கள் கிஃப்ட் சிட்டியில் எங்கு வேண்டுமானாலும் மது குடிக்கலாம். மேலும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வரும் விசிட்டர்களுக்கும் தற்காலிக பெர்மிட் வழங்கப்படும். அவர்களும் அனுமதி பெற்ற ஹோட்டல்கள், உணவகங்கள் அல்லது கிளப்புகளில் மது அருந்த அனுமதி வழங்கப்படும்.
கிஃப்ட் சிட்டியில் சர்வதேச அளவில் முதலீடுகளைப் பெற வரிச் சலுகை, விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல் எனப் பல சலுகைகளைக் குஜராத் அரசு அறிவித்து வரும் நிலையில், மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.