பட்டா மாற்றம் தொடர்பான வழக்கு – திருவள்ளூர் கலெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பட்டா மாற்றம் செய்துதரக்கோரி மனுவை 6 மாதங்களாகப் பரிசீலிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச்செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டா மாற்றம் செய்துதரக்கோரி மே மாதம் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர், தாக்கல் செய்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் கோவிந்தராஜன், தன் விவசாய நிலத்தின் மீதான பட்டாவை தன்பெயருக்கு மாற்றித்தரக்கோரி, கடந்த மாதம் மே மாதம் கோரிக்கை மனுவை வருவாய்த்துறையினருக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார்.
அதன்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததை அறிந்து உயர் நீதிமன்றத்தில் கோவிந்தராஜன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி வேல்முருகன், பட்டா மாற்றத்திற்கான வழக்கினை 6 மாதங்களாக முடிக்காத மெத்தனப்போக்கை சுட்டிக்காட்டி, இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் வருவாய்த்துறையில் நில நிர்வாக ஆணையர், பட்டாக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிறப்பித்த உத்தரவை, வருவாய்த்துறையினர் முறைப்படி பின்பற்றவில்லை என்பதை அறிந்து கண்டனம் தெரிவித்தார். மேலும் இவ்வழக்கில் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையினரின்போக்கு ஒரு மெத்தனப்போக்கான செயல் என்றும், நீதிபதி தன் உத்தரவில் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.
உரிய உத்தரவை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது இரண்டு மாதங்களுக்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை வரும் ஜனவரி 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.