எதுக்குப்பா 3 விக்கெட் கீப்பர்ஸ்.. கேஎல் ராகுல் மேல் அவ்வளவு நம்பிக்கை.. இளம் வீரருக்கு ஆப்பு உறுதி!
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் கேஎஸ் பரத் உள்ளிட்ட 3 விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணி ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியை தொடங்கி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த அணிக்கு இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ஆலோசகராக 9 நாட்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நடப்பதால் இந்திய அணி 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், கேஎஸ் பரத் மற்றும் இளம் வீரர் துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா தொடரின் போது விடுப்பு கோரிய இஷான் கிஷன், மீண்டும் தேர்வு செய்யப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக கேஎஸ் பரத் அணிக்கு திரும்பியிருந்தாலும், துருவ் ஜுரெல் என்ன காரணத்திற்காக தேர்வு செய்யப்பட்டார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.