சஞ்சீவியை ஓரமாக உட்கார வைத்த தெலுகு டைட்டன்ஸ்.. சோலியை முடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
ஜெய்ப்பூர் : 10வது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணி பரிதாபமாக ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான நிலையில் இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.
முந்தைய போட்டிகளில் தமிழக வீரர் சஞ்சீவியை பத்தோடு, பதினொன்றாக பயன்படுத்திய டைட்டன்ஸ் அணி, இந்த முறை முதல் பாதியில் வெளியே அமர வைத்து இருந்தது. இரண்டாம் பாதியிலும் அவருக்கு ரெய்டு செல்ல சரியான வாய்ப்பு அமையவில்லை. இதை அடுத்து தெலுகு அணி முதல் பாதியில் படுமோசமாக ஆடி தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி 27 – 8 என்ற அளவில் 19 புள்ளிகள் முன்னிலை பெற்றது. அந்த அளவுக்கு தெலுகு டைட்டன்ஸ் படுமோசமான ஆட்டத்தை ஆடியது. இரண்டாம் பாதியில் அந்த அணியின் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் சுதாரித்து புள்ளிகளை அள்ளினார். ஆனாலும், ஆட்ட நேர இறுதியில் 38 – 35 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிக்கு அருகே வந்து தெலுகு அணி தோல்வி அடைந்தது.