IND vs ENG : அப்பா.. கண்ணீரில் மிதந்த இளம் வீரர் துருவ்.. உணர்ச்சிவசப்பட்டு சொன்ன அந்த வார்த்தை
மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரர் துருவ் ஜுரேல் பெயர் இடம் பெற்ற நிலையில் அவர் ஆனந்தக் கண்ணீரில் மிதந்ததாக கூறி இருக்கிறார். மேலும், தன் தந்தையிடம் அதை சொல்லி நெகிழ்ச்சியில் ஆழ்ந்ததாக கூறினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் யாருமே எதிர்பாராத வகையில் மாற்று விக்கெட் கீப்பராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த துருவ் ஜுரேல் பெயர் இடம் பெற்றது.
அவர் 22 வயதே ஆன இளம் வீரர் ஆவார். முன்னதாக அண்டர் 19 அணி மற்றும் உத்தர பிரதேச மாநில அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து இருந்தார். 2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்ற அவர் இம்பாக்ட் வீரராக சில போட்டிகளில் கலக்கினார்.
ஆனாலும், அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என யாருமே நினைக்கவில்லை. இந்திய அணியில் ஏற்கனவே பல விக்கெட் கீப்பர்கள் ஒரு இடத்துக்கு போட்டி போட்டு வருகிறார்கள். கே எல் ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று அணிகளிலும் விக்கெட் கீப்பராக போட்டி போட்டு வரும் நிலையில், அவர்களுடன் ஜிதேஷ் சர்மா, கே எஸ் பாரத், சஞ்சு சாம்சன் ஆகியோரும் போட்டி போட்டு வருகின்றனர்.