5 ஆண்டுகளில் 700% லாபம்… முதலீட்டாளர்களை சந்தோஷத்தில் மிதக்க வைத்த மல்டிபேக்கர் பங்கு
முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை முதலீட்டை அதிகரித்து வருவது மற்றும் சாதகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்கள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தற்போது புதிய உச்சத்தில் உள்ளன.
பல முன்னணி நிறுவன பங்குகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இருப்பினும் ஒரு ஸ்மால் கேப் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அந்த நிறுவன பங்கு குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஒராண்டு காலத்தில் அந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு 150 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் அளித்துள்ளது. அந்த மல்டிபேக்கர் பங்கு பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ். பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பைபர் ஆப்டிக் கேபிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அண்மையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளது. கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது. 2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.210.54 கோடியும், நிகர லாபமாக ரூ.14.53 கோடியும் ஈட்டியிருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.250.28 கோடியாகவும், நிகர லாபம் ரூ.19.45 கோடியாகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் இப்பங்கின் விலை ரூ.36லிருந்து ரூ.98.50ஆக உயர்ந்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை 150 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 700 சதவீதம் ஆதாயம் வழங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த 5ம் தேதியன்று வர்த்தகத்தின் இடையே பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.98.50ஐ எட்டியது. தற்போது இப்பங்கின் விலை 52 வார உயர்வுக்கு அருகில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இப்பங்கின் ரூ.91.95ஆக உள்ளது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,569 கோடியாக உள்ளது. பைபர் ஆப்டிக் கேபிள் தயாரிப்பு துறையில் வலுவான போட்டி இருந்தாலும் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நல்ல ஆதாயம் கொடுத்த இந்த மல்டிபேக்கர் பங்கு மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.