போனஸ் பங்கு அறிவிக்கும் ஸ்மால்கேப் நிறுவனம்.. அட பிரபல முதலீட்டாளர் கூட முதலீடு செய்திருக்கிறாரே..!!
பங்குச் சந்தைகளில் ஒருவர் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
நிறுவனம் வளர்ச்சி அடையும் போது பங்கின் விலை உயரும் அதன் மூலம் லாபம் பார்க்கலாம்.சில நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கும். இது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் லாபமாகும். தற்போது ஸ்மால்கேப் நிறுவனம் ஒன்று விரைவில் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனஸ் பங்கு வழங்க இருக்கும் சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பல்முகப்படுத்தப்பட்ட குழுமமான சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் 1993ல் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் புரோக்கிங் மற்றும் விநியோகம், முதலீட்டு வங்கி, வணிக ஆலோசனைக்கான நிதி சேவைகள், அரசு ஆணையங்கள் மற்றும் இதர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை இணக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிதி சேவைகள், ரீடெயில் கடன் விநியோகம், மியூச்சுவல் பண்ட் விநியோகம், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிற துணை சேவைகளை வழங்குகிறது.பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான மதுசூதன் முரில்தர் கேலா இந்நிறுவனத்தில் கணிசமான அளவில் முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனத்தின் 12.06 சதவீத பங்குகளை அவர் வைத்துள்ளார்.ஸ்மால்கேப் பங்கான சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாப பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.12.95 கோடியும், நிகர லாபமாக ரூ.2.29 கோடியும் ஈட்டியுள்ளது.இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டில் தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கு வழங்கியது.இந்நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்க வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்கு விலை புதிய 52 வார உயர்வான ரூ.544.00ஐ எட்டியது.சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் வரும் திங்கட்கிழமையன்று (ஜனவரி 15) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஈக்விட்டி பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகள் அறிவிப்பதற்கான முன்மொழிவை பரிசீலிக்கவும், பரிந்துரைக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.போனஸ் பங்குகள் வழங்குவது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.