“50 ரூபாய் கொடுங்க”.. மக்களுடன் முதல்வர் முகாமில் பணம் வசூல்! அதிராம்பட்டினம் மக்கள் அதிர்ச்சி
தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அரசு ஆவணங்கள் திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார். இந்த முகாம், முதல்கட்டமாக வரும் 18 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் இந்த முகாம்களில்ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள் என்றும், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 27 வார்டுகளுக்கும் ஒரே இடத்தில் 5 நாட்கள் முகாம் நடைபெற்று நேற்று நிறைவடைந்தது.
ரேசன் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் விண்ணப்பம், திருத்தம் போன்ற பணிகளுக்காக ஏராளமான மக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டனர். 27 வார்டுகளுக்கும் ஒரே இடத்தில் முகாம் வைத்ததால் பல மணி நேரம் மக்கள் காத்திருக்கும் சூழலும், வாகனங்களுக்கு அதிக செலவு செய்து வரும் நிலையில் ஏற்பட்டது. பல்வேறு சிரமங்களை சமாளித்து இந்த முகாமிற்கு வந்த மக்கள் அங்கு ரேசன் அட்டை விபரங்கள் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.50 முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
மக்களுடன் முதல்வர் முகாம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் நகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே இலவச சேவை என்றே நம்பியே சென்றதாகவும், இங்கு கட்டணம் வசூலிப்பார்கள் என்று தெரிந்தால் வீட்டுக்கு அருகில் உள்ள டிடிபி செண்டருக்கே சென்று மாற்றி இருப்போம். பயண செலவும் நேரமும் மிச்சமாகி இருக்கும் என மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மற்ற பகுதிகளில் நடைபெற்ற முகாம் தொடர்பாக விசாரித்தபோது அங்கு இதுபோன்ற சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக நாம் அதிராம்பட்டினம் கவுன்சிலர்களிடம் விசாரித்தபோது தனியார் இ சேவை மையத்தை சேர்ந்தவர்கள் இந்த முகாமுக்கு வந்து பணிகளை செய்து கொடுப்பதற்காகவே கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அப்படி செய்தாலும் அந்த செலவை அரசு ஏற்று இருக்க வேண்டும் என்பது மக்களின் வாதமாக உள்ளது.