புலம்பெயர்தலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள கனடா அமைச்சர்கள்: வெளியாகியுள்ள தகவல்
கனடா அரசியலில் எப்போதுமே அதிகம் பேசப்படும் ஒரு விடயம் புலம்பெயர்தல். என்ன நடந்தாலும், அத்துடன் புலம்பெயர்தலை இணைத்துப் பேசும் அரசியல்வாதிகள் கனடாவில் உண்டு.
ஆனால், புலம்பெயர்தலுக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் பேசியதைக் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
புலம்பெயர்தல் குறித்து எச்சரித்த அலுவலர்கள்
2022ஆம் ஆண்டின் புலம்பெயர்தல் துறை தொடர்பான உள்விவகார ஆவணங்களில், புலம்பெயர்வோர் எண்ணிக்கையை அதிகரித்தல், வீடுகள் மற்றும் பிற தேவைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என துறை சார்ந்த அமைச்சர் ஒருவரிடம் புலம்பெயர்தல் துறை அலுவலர்கள் எச்சரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயர்தலுக்கு ஆதரவாக பேசிய கனடா அமைச்சர்கள்
ஆனால், அமைச்சர்களோ, புலம்பெயர்தலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள். அதாவது, புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை அதிகரித்தது சரிதான் என அவர்கள் கூறியுள்ளார்கள்.
கோவிடுக்குப் பிறகான காலகட்டத்தில், கனடா பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விடுபட புலம்பெயர்தல் உதவியாக இருந்தது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
கோவிடுக்குப் பிந்தைய காலகட்டத்தில் நாம் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை அதிகபடுத்தாமல் இருந்திருந்தோமானால், கனடாவின் பொருளாதாரம் சுருங்கியிருக்கும் என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.
மேலும், பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக, பல தொழில்கள் முடங்கியிருக்கும், அத்துடன் புலம்பெயர்ந்தோர் இல்லாதிருந்தால், மருத்துவத் துறை முதலான சேவைத் துறைகளில் மேலும் தாமதங்களை சந்திக்க வேண்டியிருந்திருக்கும் அல்லது அந்த துறைகளை மக்கள் அணுகுவதே கடினமாகியிருக்கும் என்று அமைச்சர்கள் கூறியதாக அந்த ஆவணம் தெரிவித்துள்ளது.
அந்த காலகட்டத்தில் புலம்பெயர்தல் துறை அமைச்சராக இருந்தவர் Sean Fraser. அவர் தற்போது வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அப்போது புலம்பெயர்தலுக்கு ஆதரவாக பேசிய அவரே, இப்போது கனடாவில் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள் காரணம் என்று கூறி, புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம்!