ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு லாபமாக முடிந்த ஏமன் தாக்குதல்… நிபுணர்கள் அளிக்கும் விளக்கம்
வியாழக்கிழமை இரவு, பிரித்தானியா, அமெரிக்கா என்னும் இரண்டு பெரிய நாடுகள், நிலப்பரப்பில் சவுதி அரேபியாவுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய நாடான ஏமன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தின.
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்ததுபோலாயிற்று என்கிறார்கள் நிபுணர்கள்.
அதாவது, இந்த தாக்குதலால், ஒருவகையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு லாபம் என்கிறார்கள் அவர்கள்!
யார் இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்?
இதுவரை, சில நாடுகளுக்கு மட்டுமே ஏமன் குறித்தும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறித்தும் தெரிந்திருந்த நிலையில், பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஏமன் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவற்றின் ஊடகங்கள், யார் இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என்னும் கோணத்தில் தலைப்புச் செய்திகளை வெளியிட, ஒரே நாளில் உலக அளவில் பிரபலமாகியுள்ளது ஹவுதி அமைப்பு!
அதாவது, குறுகிய வட்டத்துக்கு மட்டுமே தெரிந்த ஹவுதி அமைப்பை, மறைமுகமாக பிரபலமாக்கிவிட்டது இந்த தாக்குதல் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏமன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஈரான் ஆதரவு அமைப்புதான் இந்த ஹவுதி அமைப்பு. 1990களில் ஏமனில் உருவான இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வப் பெயர், Ansar Allah என்பதாகும். இந்த ஹவுதி அமைப்பினர் ஆளும் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு, 2014 முதல், ஏமன் தலைநகர் முதல் பெரும்பாலான நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
தாக்குதல்கள் முடிவுக்கு வருமா?
இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தங்களை காசா ஆதரவாளர்கள் என கூறிக்கொள்கிறார்கள். ஆகவே, இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளதால், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல், மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது இந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
அதனால் தங்களுக்கு வியாபார ரீதியில் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்கத்தான் பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஏமன் மீது தாக்குதல் நடத்தியுள்ளன என்றும் கூறலாம். உதாரணமாக, சரக்குக் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பதால், தற்போது பிரித்தானியாவுக்கு வரவேண்டிய சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனால், பொருட்கள் பிரித்தானியாவுக்கு வந்து சேர கூடுதலாக 10 நாட்கள் ஆகிறது. பொருட்கள் வருவது தாமதமாவதால், பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஏமன் மீது நடத்திய தாக்குதலைக் கண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயந்து, செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என தான் கருதுவதாகத் தெரிவிக்கிறார் Raiman al-Hamdani என்னும் வரலாற்று ஆய்வாளர்.
எப்போதுமே, ஏமனில், சொல்லப்போனால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறிவந்துள்ளார்கள். இப்போது பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஏமன் மீது நடத்திய தாக்குதல் அதை உண்மையாக்கிவிட்டதுபோல அமைந்துள்ளதால், ஹவுதி அமைப்புக்கு அது மகிழ்ச்சிதான் என்கிறார் அவர்.
அதுமட்டுமின்றி, ஏமன் நாட்டின் மொபைல் உள்கட்டமைப்பை ஹவுதி அமைப்பு தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்துவதால், ஏமனில் எந்த இடங்களைத் தாக்குவது என அமெரிக்கா தேர்ந்தெடுப்பதை மிகவும் கடினமாக்கும் என்கிறார் Raiman al-Hamdani.
அதுமட்டுமின்றி பல ஆண்டுகளாக அண்மை நாடான சவுதி அரேபியாவுடன் ஹவுதி அமைப்புக்கு மோதல் இருந்துவரும் நிலையில், தற்போதைய சூழலால் ஏமனுடன் சவுதி அரேபியா மோதல் போக்கைத் தவிர்க்க விரும்புகிறது. அது சவுதி அரேபியாவுக்கு மட்டுமல்ல, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் லாபம்தான். மொத்தத்தில், பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஏமன் மீது நடத்திய தாக்குதல், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு லாபமாக அமைந்துள்ளது என்கிறார் Raiman al-Hamdani.