சொந்த ஊர்களுக்கு படையடுக்கும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தங்கியிருப்போர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கோயம்பேடு, ஜிஎஸ்டி சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கு சென்னையில் கல்வி, வேலை நிமித்தமாக தங்கியிருப்போர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் திங்கள் (ஜன.15) அன்று வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தொடர்ந்து திங்களும் விடுமுறை என்பதால் பலரும் பேருந்து, ரயில்களின் பலநாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர். இதனை முன்னிட்டு ஜன.12 முதலே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்ல தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு செல்வதால் இன்று சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஊருக்குச் செல்லும் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதே போல ஜிஎஸ்டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அளவில் வரும் வாகனங்களால் பெங்களூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பலரும் சொந்த பைக் மற்றும் கார்களில் செல்வதால் ஒவ்வொரு பண்டிகையின்போதும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.