“குடிக்க தண்ணீர்கூட இல்லை” – விமான நிலைய ஏரோ பிரிட்ஜில் அடைக்கப்பட்டதாக ராதிகா ஆப்தே ஆவேசம்

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையம் ஒன்றில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் பூட்டிவைக்கப்பட்டார். இது தொடர்பாக தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவு: “இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். ஆனால் தற்போது 10.15 மணியைக் கடந்தும் விமானம் இன்னும் புறப்படவில்லை. ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் என கூறி பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் வைத்து பூட்டி விட்டனர். பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர். வயதானவர்களும் உள்ளனர். எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்துள்ளனர். பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை.
நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். குடிக்க தண்ணீர் கூட இல்லை. இயற்கை உபாதைகளுக்கும் வழியில்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால் சம்பவம் நடைபெற்ற விமான நிலையத்தின் பெயரையோ, மற்ற தகவல்களையோ ராதிகா ஆப்தே வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.