அமெரிக்காவிலுள்ள சுவாமி நாராயண் கோவில் சுவற்றை பார்த்தீர்களா.. பரப்பப்படும் வெறுப்பு
அமெரிக்காவில் இந்து கோயில் சுவரில், இந்து மதத்திற்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எழுதியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கியர்களுக்கான தனி நாடு கோரிக்கையை நீண்ட காலமாக காலிஸ்தான் அமைப்பினர் முன்வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று காலிஸ்தான் அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார். இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் ட்ரூடோ கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இத்துடன் நின்றுவிடாமல் கனடாவிலிருந்து இந்திய தூதர் ஒருவரையும் அவரது அரசு வெளியேற்றியது. அவ்வளவுதான், காதும் காதும் வைத்ததை போல முடிக்க வேண்டிய விஷயத்தை ஊதி பெரியதாக்கியது மட்டுமல்லாது, தங்கள் நாட்டின் அதிகாரியையே வெளியேற்றிவிட்டாயா? என கண் சிவந்தது இந்தியா. பதிலுக்கு கனடாவின் தூதரக உயர் அதிகாரி ஒருவரையும் இங்கிருந்து இந்தியா வெளியேற்றியது. அத்துடன் நின்றுவிடாமல் 41 தூதரக அதிகாரிகளையும் தொடர்ச்சியாக கனடாவுக்கு திருப்பி அனுப்பியது. மோதல் இப்படியாக நீடிக்க அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைய வழங்கப்படும் விசாவை ரத்து செய்தது இந்திய தூதரகம். இந்த பிரச்னைகள் எல்லாம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. அதாவது கலிஃபோர்னியாவில் உள்ள நெவார்க் நகரின் கோயில் ஒன்றில், இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் வெறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அந்நகரின் காவல்துறையினர் கூறுகையில், “இங்குள்ள சுவாமிநாராயண் கோயில் சுவரில் வெறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இது ஒரு தீவிரமான பிரச்னை. நகரின் காவல்துறை சார்பில் இது போன்ற சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல்கள், சொத்து சேதம், துன்புறுத்தல், மிரட்டல் அல்லது வெறுப்பு பிரசாரம் உள்ளிட்டவற்றிற்கு இங்கு இடம் கிடையாது. எனவே இந்த பிரச்னைக்கு எதிராக நாங்கள் தீவிரமான நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம். இதற்கான ஆதாரங்கள் திரட்டி வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.
முன்னதாக காலிஸ்தான் தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக இந்தியாவை சேர்ந்தவரை அமெரிக்க காவல்துறை கைது செய்திருந்தது. கைது செய்யப்பட்டவர், காலிஸ்தான் தலைவரை கொல்ல அடியாள் ஒருவரை நியமித்திருக்கிறார். ஆனால், அவர் அமெரிக்க உளவுதுறையை சேர்ந்தவர். எனவே, கொலை செய்ய நியமிக்கப்பட்ட நபரை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக இப்படியான வெறுப்பு பிரசாரங்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.