தேசிய நெடுஞ்சாலைகளில் தொடரும் விபத்துகள்… அதிக விபத்து நடைபெறும் பகுதிகள் தமிழகத்தில் எத்தனை?
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்துநடைபெறும் பகுதிகளாக 5,803 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் 748 இடங்கள் தமிழகத்தில் உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் 701 இடங்களிலும் தெலங்கானாவில் 485 இடங்களிலும் அதிகளவில் விபத்துகள் நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடையாளம் காணப்பட்ட 5,803 இடங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 39,994 விபத்துகள் நடந்துள்ளதாகவும் இதில் 18,476 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இடங்களில் விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 15,702 கோடி ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் 3,972 இடங்களில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 14 தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக 17 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் 5 சுரங்கப் பாதைகளை அமைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும் எனவும் தெரிவித்தார்.