வங்கி வேலைக்கு முயற்சி பண்றீங்களா… அப்போ இந்த விஷயம் உங்களிடம் கட்டாயம் இருக்கணும்!!!
ஒரு வங்கி அல்லது NBFC -யில் நல்ல வேலை கிடைப்பது என்பது கடினமான உழைப்பை காட்டிலும் பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. இப்போது சாதகமான சிபில் (CIBIL) அல்லது கிரெடிட் ஸ்கோர் இதற்கு அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக வங்கித் துறையின் ஆட்சேர்ப்பு ஏஜென்சியான IBPS, தற்போது RRB, IBPS Clerk, மற்றும் PO ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஒரு முக்கியமான விஷயத்தை சேர்த்துள்ளது. அதன்படி, தகுதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்களிடம் கணிசமான கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்.
பணியில் சேரும் பொழுது விண்ணப்பதாரர்களிடம் 650-க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் கட்டாயமாக இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அனைத்து IBPS மற்றும் வங்கி தேர்வு எழுதுபவர்கள் சிபில் ஸ்கோர் என்றால் என்ன மற்றும் அது சார்ந்த விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிபில் ஸ்கோரை சரி பார்ப்பதற்கான செயல்முறை தயார் நிலையில் இருக்க வேண்டும். எனினும் குறைவான கிரெடிட் ஸ்கோர் மட்டுமே தகுதி நீக்கத்திற்கு காரணமாக அமையாது.
இந்தியாவில் கிரெடிட் இன்பர்மேஷன் ப்யூரியா இந்தியா லிமிடெட் (The Credit Information Bureau (India) Limited) சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோரை வழங்குகிறது. 300 முதல் 900 வரை வழங்கப்படும் இந்த மூன்று இலக்க ஸ்கோர் ஒரு தனிநபரின் கடனை திருப்பி செலுத்துவதற்கான திறனை குறிக்கிறது. உங்களது லோன் திருப்பி செலுத்துதல் பட்ஜெட்டுக்கு உள்ளாக நீங்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை கிரெடிட் ஸ்கோர் வெளிப்படுத்துகிறது. உங்களது கிரெடிட் வரலாறு மற்றும் பதிவேடுகள் இதனை நிர்ணயிக்கிறது.
இந்த புதுவிதமான விதி விண்ணப்பதாரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 20 முதல் 28 வயதிலான இளம் பட்டதாரிகள் கிளரிக்கல் வேலைகளை குறிவைத்து படித்து வரும் இந்த சமயத்தில் இது போன்ற ஒரு விதி அவர்களுக்கு மனதளவில் ஒரு பயத்தை உண்டாக்கி இருக்கிறது. எந்த விதமான பணி அனுபவமும் இல்லாத இளம் பட்டதாரிகளிடம் கட்டாய கிரெடிட் ஸ்கோரை எதிர்பார்ப்பதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய காரணத்தை பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்காத பட்டதாரிகள் சிபில் ஸ்கோர் வழங்குவதிலிருந்து விலக்கம் பெறுகிறார்கள்.
அப்டேட் செய்யப்பட்ட சிபில் ஸ்டேட்டஸ் வைத்திருக்காத விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்வதற்கு முன்பு அதனை அப்டேட் செய்ய வேண்டும் அல்லது லென்டரிடமிருந்து நோ ஆப்ஜக்ஷன் சான்றிதழ் ஒன்றை பெற்றிட வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பூர்த்தி செய்ய தவறினால் வேலைவாய்ப்பு கடிதம் வித்ட்ரா செய்யப்படும் அல்லது கேன்சல் செய்யப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.